பயங்கரவாதத்தில் இருந்து ஐ.நா அதிகாரிகளை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் செயல்படும் ஐநா அலுவலகங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணி நடந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் செயல்பட்ட உலக அமைப்பின் தலைமையகத்தில் கடந்த 2003இல் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். இதன் 5ஆம் ஆண்டு நினைவுதினத்தையோட்டி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் கூட்டம் ஜெனீவாவில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய பான்-கி-மூன், பயங்கரவாதத்தால் விளையும் தீமைகளை முற்றிலுமாக ஒடுக்க முடியாது என்றாலும், அதிலிருந்து ஐ.நா ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.
இதுபோன்ற (ஈராக் 2003 தாக்குதல்) மற்றொரு கோர நிகழ்வு மீண்டும் நடைபெறக் கூடாது என்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் உள்ள ஐ.நா ஊழியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பான்-கி-மூன் குறிப்பிட்டார்.
எனினும், நடுநிலையான நண்பனைப் போல் செயல்படும் ஐ.நா.வின் பங்களிப்பை உலகின் பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்ட அவர், இதனை மக்களுக்கு உணர்த்துவதே தற்போதைய சவால் என்றார்.