இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக இந்தியா வரவுள்ளார்.
மத்திய அயலுறவு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் அவர் சென்னையிலும், புது டெல்லியிலும் பல்வேறு விவாதங்களில் ஈடுபடுவார் என்றும், அதன்பிறகே பிரதமரை அவர் சந்திப்பதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருடனான சந்திப்பில் சம்பந்தனுடன் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் துணைத் தலைவர் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொள்வர் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிப்பதாக புதினம் இணைய தளம் கூறுகிறது.
முன்னதாக, தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் (சார்க்) கலந்து கொள்வதற்காக கொழும்புவிற்கு சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு சந்தித்தபோது புதுடில்லிக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்த சனிக்கிழமை இந்தியா வந்துள்ளார்.