உலக சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பருவநிலை மாற்றப் பிரச்சனையில், அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு தற்போதைய புஷ் அரசை விட கூடுதல் கவனம் செலுத்தும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான்-கி-மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் அரசுகளுக்கு இடையிலான பருவநிலை மாற்றக் குழுவின் கூட்டம் ஜெனீவாவில் இன்று துவங்கியது. இதில் பங்கேற்ற பான்-கி-மூன், செய்தியாளர்களிடம் பேசுகையில், புவி வெப்பத்திற்கு எதிராக போராடுவது குறித்து உலக அரங்கில் அமெரிக்கா சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது.
ஆனால் அதிகளவில் பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் பின்தங்கியுள்ளது என்றார்.
எனினும், புஷ் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் பராக் ஒபாமா (ஜனநாயக கட்சி), மெக்கெய்ன் (குடியரசு கட்சி) ஆகிய இருவருமே பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்ப பிரச்சனைக்கு எதிராக சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாக பான்-கி-மூன் குறிப்பிட்டார்.