குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளதால், அவர் விசா கோரி விண்ணப்பித்தாலும் அமெரிக்க அரசு அவருக்கு அனுமதி வழங்காது எனத் தெரிகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் விரைவில் நடக்க உள்ள சர்வதேச குஜராத்தி மாநாட்டில் பங்கேற்க முதல்வர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அமெரிக்க அரசு கோத்ரா படுகொலை சம்பவத்தில் மோடிக்கு தொடர்பிருப்பதாக கூறி அவருக்கு விசா வழங்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு விவகாரத்திற்கான துணை அமைச்சர் மேத்யூ ரெனால்ட்ஸ், மோடி சார்பில் இதுவரை அமெரிக்கா வருவதற்கான விசா கோரி எந்த விண்ணப்பமும் வரவில்லை என்றும், அப்படி விண்ணப்பிக்கப்பட்டால் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு விசா வழங்குவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.
குஜராத்தில் நடந்த கோத்ரா படுகொலை சம்பவத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து படுகொலைக்கு எதிரான அமைப்பு அவருக்கு விசா வழங்கக் கூடாது என அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியதாகவும், இதன் காரணமாகவே மோடிக்கு விசா மறுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2002ஆம் ஆண்டில் மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்ட போது இந்திய அரசியலில் பரபரப்பு காணப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.