Publish Date: Sat, 30 Aug 2008 (15:04 IST)
Updated Date: Sat, 30 Aug 2008 (14:59 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் இன்று விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 25 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
நேற்றிரவு துவங்கிய விமானத் தாக்குதல் தலிபான்களின் தலைவர்கள் மற்றும் அவர்களின் தொலைத் தொடர்புகளை முறியடிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் தலிபான் தலைவர்களில் ஒருவரான மவுலானா பசுல்லா இருந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் முஸ்லிம்கான், தலைவர் மவுலானா பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக ராணுவ உயரதிகாரி அளித்துள்ள பேட்டியில், தலிபான்களின் 2 தளபதிகள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் ஆயுதக் கிடங்குகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.