பர்வேஸ் முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்த போது நீக்கப்பட்ட 60 நீதிபதிகளில், 8 பேரை அந்நாட்டு அரசு மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது. எனினும் பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக இருந்த இப்திகார் சவுத்ரிக்கு மீண்டும் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
சிந்து மாகாண உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த இந்த 8 நீதிபதிகளும், கராச்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
முஷாரஃப்பால் நீக்கப்பட்ட நீதிபதிகளை உரிய காலத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தாததைக் காரணம் காட்டி பி.பி.பி. ஆளும் கூட்டணியில் இருந்து நவாஸ் ஷெரீஃப்பின் கட்சி விலகியதற்கு மன்னிப்புக் தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு 8 நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முஷாரஃப்பால் நீக்கப்பட்ட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், இன்று 8 நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டது அந்நடவடிக்கையின் முதல் கட்டம் தான் என்றும் தெரிவித்தார்.