இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாமுக்கு சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் பொறியியல் துறையில் கவுரவ முனைவர் பட்டம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டியும், சர்வதேச அரங்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவருக்கு உள்ள நிபுணத்துவத்தை கவுரவித்தும், இந்திய-சிங்கப்பூர் உறவை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் இந்த முனைவர் பட்டம் வழங்கியதாக சிங்கப்பூர் பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தலைவர் எஸ்.ஆர்.நாதன், கலாமுக்கு கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கினார். பின்னர் அந்நாட்டு அயலுறவு அமைச்சரிடம் பேசிய கலாம், பீகாரில் உள்ள புதிய நாலந்தா பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இம்மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கலாம், அதைத் தொடர்ந்து கோலாலம்பூருக்கும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.