பாகிஸ்தானில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தலீபான் தீவிரவாதிகள் இன்றும் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
வடமேற்கு ஸ்வாட் மாவட்டத்தின் சார்பாக் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தினுள், வாகனத்தில் வந்த தற்கொலைத் தீவிரவாதி திடீரென புகுந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
சார்பாக் பகுதியில் உள்ள இந்த காவல் நிலையத்தினுள் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகளின் இந்த திடீர்த் தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெஹ்ரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்க செய்தி தொடர்பாளர் முஸ்லிம் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 5 நாட்களில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய 3-வது தற்கொலைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செவ்வாய்க் கிழமை தேரா இஸ்மாயில் கான் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல் கடந்த வியாழக்கிழமை வாஹ் கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள யுத்த தளவாட தொழிற்சாலை முன்பு 3 தற்கொலைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 78 பேர் பலியானார்கள்.