பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து பர்வேஷ் முஷாரஃப் விலகியதைத் தொடர்ந்து, அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரசா கிலானியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் உள்ள ஜனநாயக அரசிற்கு அமெரிக்க நிர்வாகத்தின் ஆதரவு தொடரும் என்று உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானில் வரவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்தும், அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையைக் கொண்டு வரும் நடவடிக்கை பற்றியும் கிலானியிடம் அதிபர் ஜார்ஜ் புஷ் கேட்டறிந்தார்.
அதற்கு கிலானி, பாகிஸ்தான் அதிபர் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்குள் அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதிகாரச் சமநிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வலுவான உறவு நீடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜனநாயக அரசிற்கு அமெரிக்க நிர்வாகத்தின் ஆதரவு தொடரும் என்றார்.
இதையடுத்து முஷாரஃப்பைத் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்றி தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவியதற்காகவும் முஷாரஃப்பிற்கு ஜார்ஜ் புஷ் நன்றி தெரிவித்தார் என்று பானிஸ்தான் அயலுறவு அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.