Newsworld News International 0808 22 1080822006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிற்கு விலக்கு: என்.எஸ்.ஜி. இன்று முடிவு செய்யும்!

Advertiesment
அணு சக்தி தொழில் நுட்பம் என்.எஸ்.ஜி NSG இந்தியா விலக்கு
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (10:46 IST)
அணு சக்தி தொழில் நுட்ப நாடுகளிடமிருந்து எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறவும், விற்கவும் தனித்த விலக்குடன் கூடிய அனுமதி கோரும் இந்தியாவின் கோரிக்கை மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு இன்று இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்ட்ரியத் தலைநகர் வியன்னாவில் நேற்று காலை துவங்கிய சிறப்புக் கூட்டத்தில் இந்தியாவிற்கு நிபந்தனையற்ற விலக்கு அளிக்கும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதி முன்மொழிந்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் பல என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கா முன்மொழிந்த விலக்கு அளிக்கும் தீர்மானத்தில் பல திருத்தங்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அணுஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கை (NPT) நோக்கங்களை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதியளிப்பது, இதற்கு மேல் அணு ஆயுத சோதனை நடத்துவதில்லை என்ற உறுதிமொழி ஆகியன பெறப்பட வேண்டும் என்று அந்நாடுகள் வலியுறுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

அணு ஆயுத சோதனைகளை முற்றிலுமாக நிறுத்த பரவலான சோதனைத் தடை ஒப்பந்தத்தில் அணு ஆயுத வல்லரசுகள் கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்த முன்வரும் நிலையில் அதில் இந்தியாவும் கையெழுத்திடும் என்று உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அயர்லாந்து, ஆஸ்ட்ரியா, நியூ ஸீலாந்து ஆகிய நாடுகள் இந்த கோரிக்கைகளை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளன.

ஆனால் இந்தியாவிற்கு விலக்கு அளித்து அணு சக்தி தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட அனுமதிப்பதை எந்த ஒரு நாடும் குறிப்பிட்டு எதிர்க்கவில்லை. எனவே, மேற்கண்ட நாடுகள் விடுத்த கோரிக்கைகளை தீர்மானத்தில் சேர்ப்பது குறித்து இந்தியாவும், அமெரிக்காவும் நேற்று இரவு ஆலோசித்தன.

இன்று இறுதி கட்ட விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் வாக்களிப்பிற்கு விடப்படும். ஓரிரு நிபந்தனைகளுடன் இந்தியாவிற்கு விலக்கு அளிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. ஆனால் அந்த நிபந்தனைகளை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால், அடுத்த இரண்டு வாரத்தில் என்.எஸ்.ஜி. மீண்டும் கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil