பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டுப் பழங்குடியினர் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளின் மீது நேற்றிரவு ஆஃப்கன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 6 பழங்குடியினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக டான் நாளிதழ் தெரிவிக்கிறது.
இந்த வாரத்தில் பழங்குடியினர் மீது நடத்தப்பட்டுள்ள இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை இதே பகுதியில் 4 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பதும், இதில் பெரும்பாலானவர்கள் அயல்நாட்டுத் தீவிரவாதிகள் என்று தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு வசிரிஸ்தான் மாகாணம் முழுவதும் அவ்வப்போது அமெரிக்க உளவு விமானங்கள் சுற்றி வருவதைப் பார்க்க முடிவதாகவும், எனவே ஆஃப்கன் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கப் படையினர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்றும் பாகிஸ்தான் பழங்குடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.