இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) நாளை விவாதிக்க உள்ள நிலையில், இந்தியா விரிவான சோதனைத் தடை உடன்படிக்கையில் (சி.டி.பி.டி.) கையெழுத்திட வேண்டும் என்று அணு ஆயுதப் பரவல் தடை விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா. அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஈராக் நேற்று நியூயார்க்கில் சி.டி.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட்ட விடயத்தை அறிவித்துப் பேசிய, ஐ.நா.வின் சி.டி.பி.டி. தயாரிப்பு ஆணையத்தின் இயக்குநர் செயலர் திபோர் டோத், இந்திய, வட கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் சி.டி.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்றார்.
ஆசிய மண்டலத்தில் உள்ள இந்த மூன்று நாடுகளும் சி.டி.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திடுவது அவசியம் என்பதால், அவர்களை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார் டோத்.
அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன் வைத்துள்ள வரைவின் மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (NSG) நாளை முடிவு எடுக்க உள்ள நிலையில் டோத் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சி.டி.பி.டி. உடன்படிக்கை, அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை (என்.பி.டி.) ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என்று இந்த மாதத் துவக்கத்தில் ஜப்பான் வலியுறுத்தியது.
எந்தச் சூழ்நிலையிலும், எவ்வளவு நிர்ப்பந்தம் அளித்தாலும் சி.டி.பி.டி. உடன்படிக்கையில் கையெழுத்திட முடியாது என்று இந்தியா மறுத்து வருகிறது.
இந்தியா கையெழுத்திடும் வரை தானும் கையெழுத்திட முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், சி.டி.பி.டி. உடன்படிக்கையில் ஈராக் கையெழுத்திட்டுள்ள சம்பவம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று டோத் குறிப்பிட்டார். சி.டி.பி.டி. யில் கையெழுத்திட்டுள்ள 179 ஆவது நாடு ஈராக் ஆகும்.