அமெரிக்கா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா முன் வைத்துள்ள வரைவின் மீது அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (NSG) நாளை முடிவு எடுக்கிறது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்தியா, தனக்குத் தேவையான அணு சக்தி எரி பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளை வாங்கவும், தான் தயாரிக்கும் அணு சக்தி தொழில்நுட்ப கருவிகளை உலக நாடுகளிடம் விற்கவும் அனுமதி கோரும் வரைவை என்.எஸ்.ஜி. (Nuclear Suppliers Group - NSG) என்றழைக்கப்படும் அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவிடம் அளித்துள்ளது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள 45 நாடுகளுடன் அணு சக்தி தொழில் நுட்ப கருவிகளை வணிகம் செய்யவேண்டுமெனில் எந்த ஒரு நாடும் (5 வல்லரசுகள் தவிர) அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (என்.பி.டி.) கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியா அதில் கையெழுத்திட மறுத்துவரும் நாடு என்பது மட்டுமின்றி, தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அங்கீகரித்திட வேண்டும் என்றும் கோரி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள இந்தியா, என்.எஸ்.ஜி.யின் மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரியுள்ளது.
ஆனால் அவ்வாறு விலக்கு அளிக்க என்.எஸ்.ஜி. முன்வரும்போது, இந்தியா என்.பி.டி.யில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கக் கூடாது என்றும் கூறி வருகிறது. இதனை ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்க்கின்றன.
இந்த நிலையில், தற்பொழுது என்.எஸ்.ஜி.யின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஜெர்மனி, முன்பு தலைமைப் பொறுப்பில் இருந்த தென் ஆப்ரிக்கா, ஜெர்மனிக்குப் பிறகு தலைமைப் பொறுப்பேற்கவுள்ள ஹங்கேரி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், விலக்கு அளிக்கவேண்டிய அவசியம் குறித்தும் இன்று அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனன் விளக்குகிறார்.
நாளை வியன்னாவில் என்.எஸ்.ஜி. கூட்டம் துவங்குவதற்கு முன்னர் அதன் 45 உறுப்பினர்களிடமும் இந்தியாவின் வரைவு குறித்து மேனன் விளக்கவுள்ளார்.
இந்த நிலையில், பீஜிங்கில் இன்று பி.டி.ஐ. செய்தியாளரிடம் பேசிய சீன அயலுறவு அமைச்சகப் பேச்சாளர் கின் காங், தங்களுடைய சமூகத் தேவைகளுக்காக அணு சக்தியை பெற பன்னாட்டு ஒத்துழைப்பை நாட எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை உண்டு என்பதை ஏற்கும் அதே நேரத்தில், அணு ஆயுத பரவல் தடுப்பு நோக்கத்திற்குக் உலக நாடுகள் கட்டுப்படவும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே நாளைய கூட்டத்தில் இந்தியா என்.பி.டி.யில் கையெழுத்திட வேண்டும் என்று சீனா வலியுறுத்தும் என்று தெரிகிறது.