பர்வேஷ் முஷாரஃப் மீதான குற்றச்சாற்றுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அவரைத் தண்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அதிபர் பதிவியில் இருந்து முஷாரஃப் விலகியது தொடர்பான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தபோது, ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் முஷாரஃப்பிற்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாற்றுக்களைக் கூறினர். கடந்த 9 ஆண்டுகளில் முஷாரஃப் செய்த குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை கூட கொடுக்கலாம் என்றும் சிலர் வலியுறுத்தினர்.
நாடாளுமன்றத்தில் குற்ற விசாரணை நடத்தி, பதவி நீக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே முஷாரஃப் பதவி விலகி விட்டதாகவும், அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்துப் பேசிய பி.எம்.எல். (க்யூ) கட்சி எம்.பி.க்கள் முஷாரஃப்பிற்கு ஆதரவாகப் பேசியதுடன், அவர் பதவி விலகி விட்டதால் அவரைப் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில், முஷாரஃப் பதவி விலகயிருப்பதால் எழுந்திருக்கும் அரசியல் சூழல் குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி வீட்டில் முக்கியத் தலைவர்கள் கூடி விவாதித்தனர்.