பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் நேற்றிரவு மக்கள் நெருக்கம் மிகுந்த சந்தை அருகே தற்கொலை தீவிரவாதி வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கிழக்கு பாகிஸ்தான் நகரான லாகூரில், அலமா இக்பால் நகரில் அமைந்துள்ள மார்க்கெட் அருகே உள்ள காவல்நிலையத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தற்கொலைத் தீவிரவாதி நேற்றிரவு இந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
பாகிஸ்தானின் 61-வது சுதந்திர தினம் கொண்டாட உற்சாகத்தில் இருந்த மக்கள் அந்த பகுதியில் இருந்த சந்தையில் அதிகஅளவில் கூடியிருந்தனர்.அப்போது தற்கொலைத் தீவிரவாதி இந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இதில் உயிரிழந்த, காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல் துறையினர் என்றும் படுகாயமடைந்த 5 காவல் துறையினரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பழங்குடியினர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தானின் பாதுகாப்பு படை நிறுத்தவில்லை என்றால் பாகிஸ்தான் முழுவதும் தற்கொலைத் தாக்குதலை நடத்த உள்ளதாக தலீபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.