ரஷ்யாவுடனான போரில் தோல்வியுற்ற நிலையில், இப்பிரச்சனையை உலக நீதிமன்றத்திற்கு ஜார்ஜியா அரசு எடுத்துச் சென்றுள்ளது.
இதுதொடர்பாக ஜார்ஜியா தாக்கல் செய்துள்ள வழக்கில், இரு நாடுகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள சர்சைக்குரிய 2 ஜார்ஜிய மாகாணப் பகுதிகளில், ரஷ்யப் படையினர் அத்துமீறி நுழைந்து கொலை, கற்பழிப்பு, மக்களை வெளியேற்றியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாற்றப்பட்டுள்ளது.
ஜார்ஜியாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் அனைத்தும் பின்வாங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜார்ஜியா, ரஷ்யப் படைகள் வெளியேறினால் தான் ஜார்ஜிய மக்கள் தங்கள் சொந்தப் பகுதிக்கு மீண்டும் திரும்புவார்கள் என ஜார்ஜியா கூறியுள்ளது.
மேலும், தங்கள் நாட்டில் அத்துமீறி நுழைந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியதற்காக ரஷ்ய அரசு இழப்பீடு தர வேண்டும் என்றும் ஜார்ஜியா தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
ஜார்ஜியா வழக்கு தொடர்பாக ரஷ்யா பதில் மனு தாக்கல் செய்துள்ளதா என்பது குறித்து உலக நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டார்.
ஜார்ஜியா நாட்டின் தெற்கு ஒசிடியா மாகாணத்தின் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே 5 நாட்களாக நடந்த உக்கிர போர் நேற்று நிறுத்தபட்ட நிலையில், ரஷ்யா மீது ஜார்ஜியா உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.