ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளுடன் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படுதன் மூலம், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கத் தலைநகர் கொழும்பில் நடந்த தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஜப்பான் சென்றிருந்த, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அயலுறவு இணை அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சர், சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்கும் நாடுகள் குழுவில் உள்ள ஜப்பான் பிரதிநிதி ஜசூசி அகாசியைச் சந்தித்து சிறிலங்கா விவகாரம் குறித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிறிலங்க இனப் பிரச்சனைக்கு ராணுவரீதியாக மட்டும் தீர்வுகாண முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். தமிழர்களுக்கு எல்லா உரிமைகளுடன் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படுதன் மூலம், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண சிறிலங்க அரசு முயற்சிக்க வேண்டும்" என்றார்.
"சிறிலங்காவில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் அமைதி முயற்சி குறித்து தற்போது பேச முடியாது. அதற்காக எங்கள் முயற்சிகளைக் கைவிட்டுவிடுவோம் என்று அர்த்தமல்ல. சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளான நார்வே, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து சிறிலங்காவிற்கு அழுத்தம் வழங்குவோம்" என்றார் ரிச்சர்ட் பெளச்சர்.