பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரவுள்ள நிலையில், அதிபர் பதவியில் இருந்து விலகுவதெனவும், தனது விலகல் முடிவை பாகிஸ்தான் விடுதலை நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவிப்பது எனவும் பர்வேஷ் முஷாரஃப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்குள் முஷாரஃப் பதவி விலக முன்வந்தால் அவருக்கு கெளரவமான வழியனுப்பு அளிப்பதென ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் முடிவு செய்துள்ளதாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளதாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.
பதவி விலகுவதற்கு முன்னர், தான் பதவி நீக்கம் செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இ்ப்திகார் மொஹம்மது செளத்திரியையும், மற்ற நீதிபதிகளையும் மீண்டும் நியமனம் செய்து, பதவி நீக்கம் செய்யப்பட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பர்வேஷ் முஷாரஃபிற்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.
இதுமட்டுமின்றி, மேலும் பல ஆலோசனைகள் முஷாரஃபிற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது குறித்து அவருடைய முடிவு என்னவென்று தெரியவில்லை என்றும் அச்செய்தி கூறுகிறது.
அதிபர் பதவியில் இருந்து விலகினாலும், சிறிது காலத்திற்கு அப்பதவியில் தொடர பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம் இடமளிக்கிறது. இஸ்லாமாபாத்திற்கு வெளியே உள்ள சாக் ஷாபாத் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்திற்கு முஷாரஃப் குடியேறுவார் என்றும், அடுத்த சில வாரங்களில் அவர் அயல் நாட்டிற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதிபர் முஷாரஃப், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறவேண்டும் என்று பாகிஸ்தானின் மாகாண அவைகளில் (சட்டப் பேரவைகளில்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அடுத்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஆளும், எதிர்கட்சிகள் முடிவெடுத்துவிட்டதால் அதற்கு முன்னர் பதவி விலகிட முஷாரஃப் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.