இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 18 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இலங்கையில் வடபோர் முனையான கிளாலியில் உள்ள சிறிலங்கப் படைகளின் நிலைகளின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 21 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கப் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடந்துள்ள இந்தத் தாக்குதலை எதிர்த்து நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் பலாலி தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் சிறிலங்கப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விவரம் எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நெட் இணைய தளம் தெரிவித்துள்ளது.
இதேபோல, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று காலை 10.50 மணி முதல் இன்று பிற்பகல் 2.00 மணிவரை தங்களது நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முயன்ற சிறிலங்கா படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலை நடத்தினர். இதில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 18 படையினர் காயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.