துப்பாக்கிச்சூடில் ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் அப்துல் அஜிஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் காஷ்மீரிகளுக்கு எதிராக இந்தியா படைகளைப் பயன்படுத்துகிறது என்று குற்றம்சாற்றியுள்ளது.
"இந்திய ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகப் படைகளைப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்பாவி மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாம்" என்று பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியுள்ளார்.
"காஷ்மீர் மக்களின் வாழ்க்கைக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். நேற்று கூட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி வந்த 5 பேர் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.