துபாய், வடக்கு எமிரேட்ஸில் உள்ள சில பகுதிகளில் தானியங்கி சுய சேவை பெட்ரோல் நிலையங்களை எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் அமைக்கத் தொடங்கியுள்ளதால் அவற்றில் பணியாற்றும் இந்தியர்கள் உள்பட ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் உள்ள 10 பெட்ரோல் நிலையங்களை எமிரேட்ஸ் தேசிய எண்ணெய் நிறுவனம் (ENOC) சுய சேவை பெட்ரோல் பங்குகளாக மாற்றியுள்ளது. இதனால் வாகனம் வைத்திருப்போர் தாங்களே பெட்ரோல், டீசல் போட்டுக் கொண்டு பணத்தை செலுத்திக் கொள்ள வேண்டும். அங்கு ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற சுய சேவை பெட்ரோல் விற்பனை நிலையங்கள்தான் அதிகளவில் உள்ளன. அதே போன்ற முறையை எமிரேட்ஸ் முழுவதும் பரிட்சார்த்தமான முறையில் சோதனை செய்ய விருப்பப்பட்டோம் என்று அந்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சுய சேவை எமிரேட்ஸ் மக்களுக்கு புதிது என்பதால் முதல் 2 மாதங்ளுக்கு எமிரேட்ஸ் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் பெட்ரோல் பங்குகளில் இருப்பார்கள். அவர்கள் மக்களுக்கு இந்த சேவைக்கான வழிகாட்டியாக செயல்படுவார்கள். பழகிய பின்னர் அவர்களும் அங்கிருந்து திரும்பப் பெறப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சுய சேவை முறை 3 மாதங்களுக்கு சோதனை ரீதியாக அமல்படுத்தப்படும். இதன் வெற்றியைப் பொறுத்து எமிரேட்ஸ் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பெட்ரோல் பங்குகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த புதிய சுயசேவை முறையால் துபாய், எமிரேட்ஸ் நாடுகளில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.