இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆகவும், 5.2 ஆகவும் பதிவாகி உள்ளது.
ஈரியான் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அதிகாலை 2.07 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து சுமார் 3 மணிநேரம் கழித்து 'மலுகு' மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என்று இந்தோனேஷியா நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றும், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ குறித்து தகவல் எதுவும் இதுவரை இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தடுத்து சில மணிநேரங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோர பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.