இந்தியாவில் எய்ட்ஸ்-ன் பாதிப்பு குறைந்து வருகிறது என்று மெக்சிகோவில் நடக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் மத்திய சுகாதாரம், குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடந்து வரும் 17-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பேசிய அவர், " எய்ட்ஸ், எச்.ஐ.வி.-யின் பாதிப்பை குறைக்கும் வகையிலும் இதுகுறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி எய்ட்ஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்-3 கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தியாவில் மக்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் சமூக அமைப்புகளின் வாயிலாகவே எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன. எய்ட்சை கட்டுப்படுத்துவதில் மக்கள் நேரடியாக ஈடுபடுவதால், மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து ஏராளமான மக்கள் எய்ட்ஸ் தடுப்பு, சிகிச்சை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்திய அரசு எடுத்து வரும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எய்ட்சால் பாதிக்கப்பட்ட பலருக்கு அந்த பாதிப்பில் இருந்து விடுபட பல வகையான உதவிகள் தேவைப்படுகிறது. அதற்கான வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கினால் எய்ட்ஸ் பாதிப்பை மேலும் குறைக்கலாம்.
எய்ட்ஸ், எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல வகைகளில் பாகுபாடு காட்டப்படுகிறது. இந்த பாகுபாட்டை அகற்றினால் மட்டுமே எய்ட்ஸ் ஒழிப்பு திட்டங்கள் முழு வெற்றியடையும்" என்று கூறினார்.