சிறிலங்கா கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வெடி பொருட்கள் வைத்திருந்ததாக கூறி சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் இரண்டு குழுக்களாக விடுவிக்கப்படுகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் முதல் குழுவாக முன்னதாக இந்த வாரம் சிறிலங்கா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். வரும் திங்கள் கிழமையன்று அவர்கள் அங்கிருந்து தாயகம் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அரசால் விடுவிக்கப்பட்ட 5 மீனவர்களும், இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடி மருந்து பொருட்கள் வைத்திருந்ததாக சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் 5 மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இந்த 5 மீனவர்களுடன் மேலும் 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மற்ற 5 பேரும் வந்த படகில் வெடி மருந்து பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த 5 பேரும் அபராதத் தொகையாக சிறிலங்கா பணம் ரூ.2,500 கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.