அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியா, அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு சக்தி ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று என்.எஸ்.ஜி. நிபந்தனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அயலுறவு விவகாரக் குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மன் கூறியுள்ளார்.
அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வில் இருந்து இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு நிபந்தனையற்ற அனுமதி பெற்றுத் தருவது அமெரிக்க நாடாளுமன்ற விவாதத்தின் போது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடுத்தாண்டு ஜனவரி வரை கிடப்பில் வைக்குமாறு அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீஸா ரைஸிடம் பேசிய போது ஹோவர்ட் பெர்மன் வலியுறுத்தியதாகவும், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் இதனை விவாதிக்க போதிய அவகாசம் இல்லை என்று அவர் விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹோவர்ட் பெர்மன், தாம் இந்தியாவின் நண்பன் என்றும், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார்.
எனினும், என்.எஸ்.ஜி-யின் விதிமுறைகளில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிப்பதுடன், ஹைட் சட்டத்தில் உள்ள ஒரு சில நிபந்தனைகளை மட்டும் இந்தியாவை பின்பற்ற அறிவுறுத்தி இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதியளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விளக்கினார்.
அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியா, இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதற்கு பின்னர் அணு ஆயுத சோதனை நடத்தினால், இந்த ஒப்பந்தத்தை என்.எஸ்.ஜி. உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.