பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் பதவியைப் பறிக்கும் தீர்மானம் வருகிற 11 ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிப் பறிப்புத் தீர்மானத்தின் வரைவை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் (பி.பி.பி), நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியும் இறுதி செய்துள்ளதாகவும், இந்தத் தீர்மானம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று பி.டி.ஐ. கூறுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பை பதவியில் இருந்து நீக்குவது, முஷாரப் பதவி நீக்கிய 8 சிந்து மாகாண உயர்நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்துவது உள்ளிட்ட விடயங்களில், இந்த இருகட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.
பி.பி.பி. இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் (பி.எம்.எல்- என்) தலைவர் நவாஸ் ஷெரீஃப் இடையே கடந்த 3 நாட்களாக நடந்த பேச்சு இன்று முடிவுக்கு வந்தது.
பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில், முஷாரஃப்பை பதவி நீக்க சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரால் பதவி நீக்கப்பட்ட 8 நீதிபதிகளும் மீண்டும் பதவியில் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
முஷாரஃப் அதிகாரமற்றவர்: இதற்கிடையில், முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் பிரதமர் வசமே இருப்பதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறினார்.
மேலும், சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது முஷாரஃப் பாகிஸ்தானுக்கும், மக்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர் என்று அந்நாட்டு அதிகாரிகளிடம் குறிப்பிட்டதாகவும் அப்போது கூறினார்.
சீனப் பயணம் ரத்து: அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து சீனாவின் பீஜிங்கில் நாளை துவங்கும் ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவுக்கு செல்வதாக இருந்த திட்டத்தை முஷாரஃப் உடனடியாக ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.