சீனத் தலைநகர் பீஜிங்கில் வரும் 8ஆம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் சீன பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை அந்நாட்டு அயலுயுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் ரத்து செய்ததற்கான காரணம் என்னவென்பது பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.
அதிபர் முஷாரஃப்பை பதவியில் இருந்து இறக்கவும் அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரவும் அந்நாட்டின் ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று நடந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி, முக்கிய கூட்டணி கட்சியான நாவஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதனால்தான் அதிபர் முஷாரஃப்பின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மீண்டும் நடைபெறுகிறது.