காபூல் இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்துத் தான் விசாரணை நடத்துவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நடந்து வரும் தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின் இடையில், நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் முதன்முறையாகச் சந்தித்துப் பேசினர்.
இதில், காபூல் இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உள்ள தொடர்பு, ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அதிகரித்துள்ள ஊடுருவல் உள்ளிட்ட விவகாரங்களை மன்மோகன் சிங் எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கிலானி, காபூல் இந்தியத் தூதரகம் மீதான தற்கொலைத் தாக்குதல் குறித்துத் தான் விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். அதற்கான காலவரையறை மற்றும் விசாரணை முறை ஆகியவை குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவுடனான நல்லுறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைபிடிப்பதையும் பாகிஸ்தானில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன என்றார் கிலானி.