சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கமுடைய பயங்கரவாதத்தை நசுக்க வேண்டும் என்ற மனநிலை அனைவருக்கும் வரவேண்டும்; குரூர முகம் கொண்ட பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்!
கொழும்பில் இன்று துவங்கிய தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், காபூலில் இந்திய தூதரகத்தின் மீதான தற்கொலைத் தாக்குதல், பெங்களூரு, அகமதாபாத் நகரங்களைக் குறிவைத்த சமீபத்திய தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டார்.
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள பயங்கரவாதம் முற்றிலுமாக நசுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடக் கூடாது, அதற்கான மனநிலை அனைவருக்கும் வர வேண்டும் என்றார்.
தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாடு நடக்கும் நேரத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையை சிறிலங்க அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
சார்க் மாநாடு துவங்குவதற்கு முன்பாக கொழும்பு நகரின் பெரும்பாலான சாலைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.