காபூல் இந்தியத் தூதரகம் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்குத் தொடர்புள்ளது என்ற தகவலை அமெரிக்கா ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள விவகாரத்தை பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசா கிலானியுடனான சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கத் தலைநகர் கொழும்பில் நாளை துவங்கவுள்ள 15 ஆவது தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின் இடையில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியைச் சந்திக்கும் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதம், எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறல் உள்ளிட்ட விவாகரங்கள் பற்றி விவாதிக்கவுள்ளார்.
அப்போது ஜூலை 7ஆம் தேதி ஆஃப்கான் தலைநகர் காபூலில், இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.-க்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க, இங்கிலாந்து உளவு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ள விவகாரத்தையும் அவர் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.