தெற்கு கலிபோர்னியாவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.4 ஆக பதிவாகியுள்ளது.
காலை 11.42 மணிக்கு (கிரீன்விச் நேரம் 6.42) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சோதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.
சினோ மலை அருகே, லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், 12 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 27 முறை சிறிய அளவிலான அதிர்வுகள் கலிபோர்னியா, நெவாடா பகுதி முழுவதும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டு சுவார்ஸ்னேகர் இந்த நிலநடுக்கம் பற்றி கூறும் போது, அதிர்ஷ்டவசமாக கலிபோர்னியா மாகாணம் பெரும் சேதத்திலிருந்து தப்பித்ததாக கூறியுள்ளார்.