பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மிகவும் கொடிய செயல், இதனை வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் கோன்சாலோ கூறுகையில், " இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி பலியானவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
குண்டு வெடிப்பில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள மின் அஞ்சல் பற்றி கேட்டதற்கு, அந்த தகவலை நாங்கள் பார்த்தோம். ஆனால் அதுபற்றி உண்மையா என்று விசாரிக்க மேலும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றார்.
பெங்களூருவில் கடந்த 25ஆம் தேதி அடுத்தடுத்து 9 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 2 பேர் பலியானதுடன், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மறுநாள் 26ஆம் தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 49 பேர் பலியானதுடன் 145 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.