ஈராக்கில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த 3 பெண் தற்கொலைத் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் பலியாயினர். 92 பேர் படுகாயமடைந்தனர்.
வடக்கு பாக்தாத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஷியா முஸ்லீம் பக்தர்கள் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் புகுந்த 3 பெண் தற்கொலைத் தீவிரவாதிகளும் அடுத்துடுத்து தொடர்ச்சியாக குண்டை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் செவ்வாய்க் கிழமையுடன் முடிவடையும், ஆண்டு தோறும் நடக்கும் இந்த புனித யாத்திரை 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த புனிதர் ஒருவரின் நினைவாக நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது அல் கய்டா தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலுக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களையே அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் ஈராக்கில் பெண் தற்கொலைத் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.