பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துருகிஸ்தான் இஸ்லாமிக் கட்சி என்ற தீவிரவாத அமைப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் சமீபத்தில் நடந்த 2 குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்பதாக அதில் அறிவித்துள்ளது.
29வது ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்தக் கூடாது என தாங்கள் விடுத்த எச்சரிக்கைகளை சீனாவும், உலக சமுதாயமும் புறக்கணித்ததால், ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக துருகிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பின் தலைவர் செய்ஃபுல்லா வீடியோ பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த இண்டெல் சென்டர் என்ற தீவரவாத கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரில் கடந்த மே 5ஆம் தேதி சீன அரசுக்கு சொந்தமான 2 பேருந்தில் குண்டு வைத்தது, வென்சுவோ பகுதியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி டிராக்டரில் வெடிகுண்டுகளை நிரப்பி தாக்குதல் நடத்தியது, ஜூலை 21ம் தேதி யுனான் பகுதியில் 3 பேருந்துகளில் குண்டு வைத்தது உள்ளிட்டவற்றிற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை செய்யும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபடுவது, முக்கிய சீன நகரங்களை நூதன முறையில் தாக்குவது போன்ற திட்டங்களை செயல்படுத்த துருகிஸ்தான் இஸ்மாமிக் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இண்டெல் சென்டர் எச்சரித்துள்ளது.
பீஜிங்கில் இன்னும் 2 வாரத்தில் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த எச்சரிக்கை வீடியோ புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.