Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சனை: ஐ.நா.சபை விசாரிக்கும்!

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சனை: ஐ.நா.சபை விசாரிக்கும்!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (19:53 IST)
தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில் யாருக்கு சொந்தம் என்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஐ.நா. பாதுகாப்பு பேரவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய தாய்லாந்து ஐ.நா. தூதர், இன்று (25ஆம் தேதி) நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் ப்ரியா விஹார் சிவன் கோயில் குறித்த பிரச்சனை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இப்பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் விரும்புவதாகவும், கடந்த காலங்களில் இருநாடுகள் இடையே இருந்த சுமூக உறவு இதற்கு உதவும் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் நியூயார்க்கில் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

தாய்லாந்து-கம்போடியா நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள விஹார் எனும் இந்துக் கோயில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவன் கோயில், உலக புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் கம்போடியாவுக்கே சொந்தம் என கடந்த 1962இல் உலக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும் இப்பிரச்சனை தீராமல் தொடர்ந்தது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் விஹார் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த தாய்லாந்தைச் சேர்ந்த 3 பேரை கம்போடிய வீரர்கள் கைது செய்ததால் பிரச்சனை தீவிரமடைந்தது.

இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசு 400 வீரர்களை கம்போடியாவுக்குள் அனுப்பி அக்கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தியது. இதையடுத்து கம்போடிய வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் ஐ.நா. இதுகுறித்து இருநாட்டு அரசையும் பேச்சுக்கு அழைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil