சிறிலங்காவில் தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு (சார்க்) மாநாடு நடக்கும் காலத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்து வரும் போர் தொடரும் என்று சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சார்க் மாநாட்டு பாதுகாப்பிற்கும், வடபகுதியில் சிறிலங்கப் படையினருடன் சண்டையில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது தாக்குல்களை நடத்துவார்கள் என்று சரத் பொன்சேகா கூறியதாகப் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும் அவர் தெரிவிக்கையில், "சார்க் மாநாடு நடக்கும் காலத்தில் கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்ய பெருமளவிலான படையினர் தேவைப்படுகின்றனர். இந்தப் பணியை அயல்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பார்த்துக்கொள்வர்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பை, கொழும்பு வரவுள்ள இந்தியப் படையினர் பார்த்துக்கொள்வர். அயல்நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பை அவரவர் மெய்க் காப்பாளர்கள் பார்த்துக்கொள்வதால், சிறிலங்கப் படையினர் கொழும்பின் பாதுகாப்பை மட்டும் உறுதி செய்துகொள்வர்." என்று கூறியுள்ளார்.