அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பேரவையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ட்ரோ வாஷிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிரவு நடந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்து விவாதித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்திய அரசுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை தொடரவும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும் பிரதமரிடம் புஷ் விருப்பம் தெரிவித்தாகவும் கார்டன் ஜான்டிரோ கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
2003ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில், அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கும், அவர்களின் விளைபொருட்களுக்கும் அளித்துவரும் மானியத்தை குறைத்தால்தான், வளரும் நாடுகளின் சந்தைகளை அந்நாட்டு வேளாண் விளைபொருட்களுக்கு திறந்துவிட முடியும் என்று இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகள் நிபந்தனை விதித்தன.
இதன் காரணமாக உலகளாவிய தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் நிறைவேறவில்லை. எனவே, தற்பொழுது ஜெனிவாவில் நடைபெறும் பேச்சில் அந்த முட்டுக்கட்டைக்கு தீர்வு காண வளர்ந்து நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிபர் புஷ் கூறியதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதித் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் செய்தியாளர்களிடம் ஜான்ட்ரோ கூறியுள்ளார்.