மக்களவையில் நம்பிக்கைத் தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு வெற்றிபெற்றுள்ளதற்கு சிறிலங்கா அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் அரசின் வெற்றி தான் மேற்கொண்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று சிறிலங்கா கூறியுள்ளது.
சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கையில் "இந்திய அரசின் இந்த வெற்றியால் இந்தியாவின் உறுதிநிலை மட்டுமல்ல, தெற்காசிய மண்டலத்தின் உறுதிநிலையும் காப்பாற்றப்பட்டுள்ளது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் இந்திய அரசு தோற்றிருந்தால், தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும். பெரிய அளவிலான கொள்கை முடிவுகள் எதையும் இந்திய அரசினால் எடுத்திருக்க முடியாது. தெற்காசியாவின் உறுதிநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்க அரசின் போரும் பாதிக்கப்பட்டிருக்கும்.
இந்திய அரசு வெற்றிபெற்றுள்ளதால் இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது." என்றுள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் பற்றி அவர் கூறுகையில், "இந்த விடயத்தில் இந்திய அரசிற்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது குறித்து சிறிலங்கா கவலையடைகிறது. இந்தியாவின் மத்திய அரசுடனேயே சிறிலங்கா தொடர்புகளைப் பராமரிக்குமே தவிர, மாநில அரசுகளுடன் அல்ல" என்றார்.