தெற்காசிய நாடுகள் மண்டல ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் நமது பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பளிப்பதற்காக இந்தியப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவு கொழும்பு சென்றடைந்துள்ளது. இன்னும் ஒருபிரிவு விரைவில் கொழும்பு செல்லவுள்ளது.
இத்தகவலைத் தெரிவித்துள்ள சிறிலங்கப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேலிய ரம்புக்வல, இந்தியத் தலைவர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விட, கூடுதலான பாதுகாப்பு கொழும்பு வரவுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார் என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.
கொழும்பு சென்றடைந்துள்ள இந்தியப் படையினர் குறித்த மேல் விவரங்களை வெளியிட மறுத்துள்ள கேலிய ரம்புக்வெல, சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போது அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போன்றதுதான் இது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சிறிலங்கா புறப்பட்டுள்ள இந்தியப் போர்க்கப்பல் சிறிலங்கா எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும், ஹெலிகாப்டர்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் போன்றவை இந்த வாரம் கொழும்பு வரவுள்ளதாகவும் சிறிலங்கா அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.