இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு தற்போதைய கூட்டத்தொடரிலேயே அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் வழங்கிடும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
"இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக உள்ள ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினருடனும் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அநேகமாக நடப்புக் கூட்டத் தொடரிலேயே காங்கிரசின் ஒப்புதல் கிடைத்துவிடும்" என்று வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ நம்பிக்கை தெரிவித்தார்.
"இன்னும் 30 நாட்கள் காங்கிரஸ் கூட்டத் தொடர் நடக்க உள்ளது. எனவே, காங்கிரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் முயற்சிகளில் புஷ் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது" என்றார் அவர்.
இதற்கிடையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நமது மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு வெற்றிபெற்றுள்ளதற்கு இந்திய- அமெரிக்க அரசியல் செயற்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க காங்கிரசின் இந்த ஆண்டுக் கூட்டத் தொடர் முடிவதற்குள் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒபபுதல் கிடைத்து, அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று அக்குழுவின் தலைவர் சஞ்சய் பூரி கூறியுள்ளார்.
"இந்த வெற்றியின் மூலம் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னாட்டு அணு சக்தி முகமை, அணு தொழில்நுட்ப வணிகக்குழு ஆகியவற்றை அணுகுவதற்கான அரசியல் ஒப்புதலை இந்திய அரசு பெற்றுவிட்டது" என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.