Publish Date: Tue, 22 Jul 2008 (14:02 IST)
Updated Date: Tue, 22 Jul 2008 (14:00 IST)
கொழும்புவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின்போது (சார்க்) போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கப் போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுத்துள்ள அறிவிப்பை சிறிலங்க அரசு நிராகரித்துள்ளது.
"தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள சிறிலங்க அரசு தயாராக இல்லை" என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ததாக, சிறிலங்க அரசின் தகவல் ஒளிபரப்பு ஸ்தாபனம் (எஸ்.எல்.பி.சி.) இன்று காலை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அறிவித்தது.
"போர் முனையில் ராணுவரீதியாகத் தாங்கள் பலவீனமடையும்போது, பேச்சுக்களை நடத்துவதன் மூலம் தங்களின் பலத்தைப் புதுப்பித்துக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொள்ளும் பொருட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பின்பற்றும் தந்திரம்தான் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பு. இத்தகையை தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குள் தலையிடும் அவசியம் சிறிலங்க அரசிற்கு இல்லை" என்று கோத்தபாய ராஜபக்ச கூறியதாக (எஸ்.எல்.பி.சி.) தெரிவிக்கிறது.
"அப்படி நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை நம்ப வேண்டும் என்றால், அவர்கள் முதலில் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைய வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பு நார்வே மூலம் வெளியிடப்பட வேண்டும் என்று சிறிலங்க அரசு எதிர்பார்ப்பதாக அரசின் அமைதிச் செயலகத்தின் செயலர் டாக்டர்.ராஜிவ் விஜசிங்கே கூறியுள்ளார்.
"எங்களுக்கு அமைதி வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதியை நிச்சயம் விரும்புகிறார்கள் என்றால், அவர்கள் தங்களது போர்நிறுத்த அழைப்பை எங்களிடம் நேரடியாக விடுக்கிறார்களா அல்லது நார்வே மூலம் விடுக்கிறார்களா என்பதைப் பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம்" என்று விஜசிங்கே கூறியதாக ஏ.எஃப்.பி நிறுவனம் தெரிவிக்கிறது.
"இதற்கமுன்பு பலமுறை, தங்களின் படை பலத்தை பெருக்குவதற்கான அவகாசத்தை பெறும் பொருட்டு இதுபோன்ற அறிவிப்புகளை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருக்கிறார்கள். நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.