நேபாளத்தின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ராம் பரதன் யாதவ் நாளை பதவியேற்கிறார்.
நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி, அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பலத்த ராணுவ பாதுகாப்புடன், மஹராஜ்குன்ஜ் என்னுமிடத்தில் அமைந்துள்ள புதிய அதிபருக்கான 'சீட்டல் நிவாஸ்' மாளிகைக்கு செல்கிறார்.
நேபாள நாட்டின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா பயன்படுத்தி வந்த கருப்பு வண்ண காரில் ராணுவம் புடைசூழ ராம் பரதன் யாதவ், அதிபர் மாளிகைக்குச் செல்கிறார். பாதுகாப்புக்காக 1000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வரும் வியாழக்கிழமை அன்று அரசியல் நிர்ணயசபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நேபாளி காங்கிரஸ் கட்சி, சி.பி.என்.-யு.எம்.எல்., எம்.பி.ஆர்.எப். ஆகிய மூன்று கட்சி கூட்டணியின் சார்பில் அப்பதவிக்கு யுஎம்எல் கட்சியின் சுபாஷ் நேம்வாங் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.