பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்கய்டா தீவிரவாத முகாம்கள் மீது அந்நாட்டு அரசு தாக்குதல் நடத்தாவிட்டால், அமெரிக்க படைகள் அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என அமெரிக்க அதிபர் வேட்பாளர் பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானில் செயல்படும் அல்கய்டா தீவிரவாதிகள், ஆப்கானிஸ்தானில் ஊடுருவி சேதம் விளைவிப்பது குறித்து பேசினார்.
பாகிஸ்தானில் அல்கய்டா தீவிரவாத முகாம்கள் பற்றி உறுதியான உளவுத்தகவல்கள் கிடைத்து, அவற்றை அழிக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமெரிக்க அரசு இதில் நேரடியாக ஈடுபடும் என்று அவர் கூறினார்.
தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அந்நாட்டில் அமைதியை நிலைநிறுத்த போராடி வரும் அதே தருணத்தில், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத செயல்களையும் கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க நினைப்பதாகவும், இதற்கு பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.
அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் ஓரிரு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைதி நிலையை ஏற்படுத்த பாகிஸ்தான் அரசு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.