Publish Date: Mon, 21 Jul 2008 (15:39 IST)
Updated Date: Mon, 21 Jul 2008 (15:38 IST)
பீஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி ஆகியோருடன் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய பிரதமருமான புதின் பங்கேற்பார் என செய்திகள் வெளியாகின. எனினும் அது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.
இதற்கிடையில், மாஸ்கோ நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதின் செய்தித் தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவ், ஒலிம்பிக் துவக்க விழாவில் புதின் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அது தொடர்பான ஏற்பாடுகளை ரஷ்ய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாவும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது புஷ், சர்கோஸி, புதின் இடையே அரசுமுறை கூட்டம் நடைபெறுமா என்பது குறித்து அவர் விளக்கவில்லை.