ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சியை முடித்துவிட்டு, புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அங்கு முகாமிட்டிருக்கும் அமெரிக்கப் படைகள் அடுத்த ஆண்டில் முழுவதுமாக வெளியேற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
ஈராக்கில் தீவிரவாதச் செயலை முழுமையாக ஒடுக்கும் பணியில் சுமார் ஒன்றரை லட்சம் அமெரிக்க படையினர் அங்கு உள்ளனர்.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படை வீரர்களை குறி வைத்தே பல தாக்குதல்கள் நடத்தப்படுவதாலும், அமெரிக்க படைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதாலு, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வற்புறுத்தி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, தான் பதவிக்கு வந்தால், 16 மாதங்களில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதிபர் புஷ், படைகளை திரும்பப் பெற்றால், ஈராக் தீவிரவாதிகளின் வன்முறை அதிகரித்து விடும் என்று கூறி தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க படைகளை திரும்பப் பெற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஈராக் பிரதமர் நுரி அல்-மாலிகி கடந்த வாரம் வலியுறுத்தினார்.
இது குறித்து புஷ், ஈராக் பிரதமருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில், அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறுவது பற்றி ஒப்புக் கொள்ளப்பட்டது.
தன்னிச்சையாக தேதி நிர்ணயிக்காமல், ஈராக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதன் அடிப்படையில் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெறப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.