Publish Date: Sat, 19 Jul 2008 (13:50 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (13:50 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களை இந்தியா தீர்க்க வேண்டும் என்று பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் கூறியுள்ளனர்.
வியன்னாவில் உள்ள பன்னாட்டு அணு சக்தி கண்காணிப்பு முகமையின் தலைமையகத்தில் நேற்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் அதன் ஆளுநர்களுக்கும், அணு சக்தி தொழில் வணிக்க் குழுவின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் கண்காணிப்பு ஒப்பந்த வரைவை குறித்து இந்திய அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேன்ன் விளக்கினார்.
பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஒப்புதலுக்காக இந்தியா உருவாக்கியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவில், ஒப்பந்தத்தை துண்டித்துக்கொள்வது, மாற்று நடவடிக்கை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதென ஐ.ஏ.இ.ஏ. ஆளுநர்களும், அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவின் (Nuclear Suppliers’ Group) உறுப்பினர்களும் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகின்றது.
“எங்களுடைய சில கேள்விகளுக்கு அவர்கள் (இந்தியா) பதிலளித்தார்கள், ஆனால் எல்லா கேள்விகளுக்கும் திருப்திகரமாக பதிலளிக்கவில்லை” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் தங்களது அணு உலைகளுக்கு கிடைக்கவேண்டிய யுரேனியம் எரிபொருள் நிறுத்தப்பட்டால் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனான கண்காணிப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்தியாவிற்கு உரிமை தரும் பிரிவும், எரிபொருளைப் பெற மாற்று நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை தொடர்பாகவும் சந்தேகங்கள் உள்ளதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்கள் கூட்டத்தில் இந்தியாவிற்கான கண்காணிப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.
Webdunia
Publish Date: Sat, 19 Jul 2008 (13:50 IST)
Updated Date: Sat, 19 Jul 2008 (13:50 IST)