அமெரிக்க அதிபர் தேர்தலில் ஐனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பராக் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆர்வமாக உள்ளதாக கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒபாமா உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இந்த பேச்சு பயனுள்ளதாக அமைந்தது. எப்போது எல்லாம் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்போது எல்லாம் பிரச்சாரம் செய்ய தான் தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்".
ஐனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவி வேட்பாளராக போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவந்தது. இந்தப் போட்டி கடந்த மாதம் முடிவடைந்தது. ஒபாமா வெற்றிப் பெற்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பில் கிளிண்டன், ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து இருப்பதால், ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு மேலும் பிரகாசமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.