அமெரிக்காவின் பொருளாதாரம், ஈராக் போர் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிபர் ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து விட்டது என அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் நான்ஸி பெலோஸி பகிரங்கமாக குற்றம்சாற்றியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புஷ்ஷின் ஆட்சி குறித்து தனியார் தொலைக்காட்சி நான்ஸி பெலோஸியிடம் கருத்துக் கேட்டபோது, இந்த குற்றச்சாட்டை அவர் தெரிவித்தார்.
பொறுப்பற்ற நடவடிக்கைகளால் அமெரிக்க மக்களின் நம்பகத்தன்மையை இழந்த புஷ்ஷுக்கு கடவுள் ஆசி வழங்க வேண்டும் என தனது பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
புஷ் செய்யும் பொறுப்பற்ற காரியங்களால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய கடந்த காலங்களில் நாடாளுமன்றம் தொடர்ந்து பாடுபட்டதாகவும், இது அதிபர் புஷ்ஷுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் பெலோஸி குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த ஏழரை ஆண்டுகளாக புஷ் ஆட்சியில் அமெரிக்க எரிசக்தி கொள்கை தோல்வியை தழுவியுள்ளது என்றும், நாட்டின் பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளதாகவும் தனது வாதத்தை பெலோஸி நியாயப்படுத்தி உள்ளார்.