காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் உயர் அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்றையக் கூட்டத்தில், கடந்த மே 21ஆம் தேதி இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி இடையே நடைபெற்ற 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கிடையே போக்குவரத்து, வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் அயலுறவுத் துறை இணை செயலாளர் டி.சி.ஏ ராகவன் தலைமையிலும், பாகிஸ்தான் சார்பில் அதன் பொது இயக்குனர் (தெற்காசியா மற்றும் சார்க்) அஜிஸ் அகமது சவுத்ரி தலைமையிலும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 10ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே நடந்த தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.