பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் தங்களுக்கு ஆழமான வலுவான நல்லுறவு௦ உள்ளது என்று அமெரிக்க அயலுறவு கூடுதல் செயலர் ஜான் நெக்ரோபாண்டே கூறியுள்ளார்.
இதுகுறித்து வாஷங்டனில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பிரதிநிதிகளிடையில் பேசிய அவர், "இருதரப்பு நலன்கள் அடிப்படையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஆழமான வலுவான உறவு உள்ளது. பாதுகாப்பு, அறிவியல், விவசாயம், கல்வி, சுற்றுச்சூழல் மேம்பாடு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த உறவு விரிவுபட்டுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு, எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட மிகப்பெரிய சவால்களை இணைந்து முறியடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் முக்கிய நண்பர்களும் கூட்டாளிகளும் ஆகும். இந்த இருநாடுகளும் வெற்றிபெறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்ற நெக்ரோபாண்டே, பயங்கரவாத வன்முறைகளை முறியடித்தல், உணவு மற்றும் எரிசக்திப் பிரச்சனைகளைத் தீர்த்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக பாகிஸ்தான் அரசுடனும் அந்நாட்டு மக்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.